Type Here to Get Search Results !

விவேகம் - விமர்சனம்

நடிகர்கள்: அஜித் குமார், காஜல் அகர்வால், அக்ஷரா ஹாஸன், விவேக் ஓபராய்
ஒளிப்பதிவு: வெற்றி
இசை: அனிருத்
தயாரிப்பு: சத்யஜோதி


பிலிம்ஸ் இயக்கம்: சிவா 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தை ஒரு ஒன் மேன் ஆர்மியாகக் காட்ட உருவாக்கப்பட்டுள்ள படம் விவேகம். வீரம் படத்தில் அண்ணன் தம்பிகள் பாசம், வேதாளத்தில் அண்ணன் தங்கை பாசம்... விவேகத்தில் கணவன் - மனைவி அன்பு! எதையும் தனி ஒருவராகச் சமாளிக்கும் ராணுவ உளவாளி அஜித் குமார். அவரது மனைவி காஜல். ரொம்ப அந்நியோன்னிமான தம்பதி.

பூமிக்கடியில் புதைத்து வைக்கப்பட்டிருக்கும் பயங்கர ஆயுதங்களைக் கண்டுபிடிக்கும் பொறுப்பு அஜித் தலைமையிலான குழுவுக்குத் தரப்படுகிறது. குழுவில் ஒருவரான விவேக் ஓபராய் அஜித்துக்குத் தெரியாமல் அந்த ஆயுதங்களைக் கடத்தி விற்கத் திட்டமிட்டு, அஜித்தையும் சுட்டுவிட்டு, அவர் ஆயுதம் திருடி விற்றதாகவும் பழி சுமத்திவிடுகிறார். குண்டடிபட்ட அஜித் மரமொன்றில் சிக்கிக் கொள்கிறார். அதிலிருந்து தப்பி வரும் அஜித் விவேக் ஓபராயை எப்படி பழிவாங்குகிறார்? தன் மீதான தேசத் துரோகப் பழியை எப்படிப் போக்குகிறார்? என்பதெல்லாம் மீதி. ஆங்கிலப் படங்களுக்கு நிகரான காட்சியமைப்பு, இது வரை யாரும் பார்த்திராத லொகேஷன்கள், அசர வைக்கும் அஜித்தின் பங்களிப்பு என சில நல்ல விஷயங்களை முன்னிறுத்தினாலும், எளிதில் யூகிக்கக் கூடிய வலுவற்ற திரைக்கதை படத்தின் காலை வாருகிறது.

கட்டான உடல், சால்ட் அன்ட் பெப்பர் ஹேர் ஸ்டைலில் அப்படியே ஹாலிவுட் நடிகர் மாதிரி இருக்கிறார் அஜித். நடை, உடை, வசன உச்சரிப்பு என அனைத்திலுமே அவரது ரசிகர்கள் விரும்பும் அளவுக்கு அசத்தியிருக்கிறார் அஜித். ஆனால் ஒரு கட்டத்தில் அதுவே திகட்டிவிடுவதையும் குறிப்பிடாமல் இருக்க முடியாது.

காஜல் அகர்வால் அஜித்துக்கு மனைவியாக வருகிறார். அவரது பாத்திரத்துக்கு முதல் பாதியில் இருக்கும் முக்கியத்துவம், சுவாரஸ்யம் அடுத்த பாதியில் இல்லாமல் போகிறது. அஜித்தின் நண்பராக வந்து, பின் துரோகியாக மாறும் வேடம் விவேக் ஓபராய்க்கு. ஒரு டெம்ப்ளேட் வில்லன் வேடம்தான். ஆனாலும் சிறப்பாகவே செய்திருக்கிறார். அடுத்து அவர் என்ன செய்யப் போகிறார் என்பதை எளிதில் யூகிக்க முடிவது அவர் பாத்திரத்தை வலுவிழக்கச் செய்கிறது.

ஹேக்கராக வருகிறார் அக்ஷரா ஹாஸன். அவரது ஆரம்பக் காட்சி அசத்தலாக இருந்தாலும், அந்தப் பாத்திரத்துக்கு அத்தனை முக்கியத்துவம் இல்லை. கருணாகரனின் காமெடி இந்தப் படத்துக்கு மிகப் பெரிய ஆறுதல். இந்தப் படத்தின் மிகப் பெரிய பலம் சண்டைக் காட்சிகள். அஜித்தின் அந்த நீ...ள பைக் சண்டைக் காட்சி சிலிர்க்க வைக்கிறது. வசனங்களின் ஒலித் துல்லியம் பிரமாதம். ஆனால் ஒரு கட்டத்துக்குப் பிறகு எல்லாமே சாதாரண தமிழ் மசாலாப் படமாக மாறிவிடுகிறது. வெற்றியின் ஒளிப்பதிவு பிரமாதம்தான். ஆனால் எதற்காக கண்களைக் கஷ்டப்படுத்தும் அளவுக்கு அப்படி ஓடிக் கொண்டே இருக்கிறது காமிரா? சாதாரணமாக எடுக்க வேண்டிய காட்சியைக் கூட எதற்காக இப்படி அசைத்து ஆட்டி இம்சைப்படுத்த வேண்டும்? அனிருத்தின் பின்னணி இசை, பாடல்கள் இரண்டுமே மோசமில்லை. டல்லடிக்கும் திரைக்கதைக்கு முட்டி மோதி தூக்கி நிறுத்த உதவுகிறது. படம் முழுக்க பல இடங்களில் அஜித்தின் புகழ்பாடும் காட்சிகள். இதையெல்லாம் தவிர்த்திருந்தால் இன்னும் வேகமெடுத்திருக்கும் படம். அஜித்தை வைத்து அடுத்தடுத்து மூன்று படங்கள் எடுக்கும் மிகப் பெரிய வாய்ப்பு சிவாவுக்குக் கிடைத்தது. முதலிரண்டில் அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் திருப்திப்படுத்த முயன்ற இயக்குநர், இந்தப் படத்தை ஸ்ட்ரிக்ட்லி அஜித் ரசிகர்களுக்காகவே என மெனக்கெட்டு எடுத்திருக்கிறார்.

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad